The Official Education Site of DHARUL HIKMA

Phone : (+94) 752523669
Email : kalvithottam@gmail.com

சிறுவர் பக்கம்

இளவரசரும் எலியும்


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான். அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.


மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார்.
அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது.

எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார். உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார்.

வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்! ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான். உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது.

அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?. ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.

"4தமிழ்மீடியா"



உலகத்தின் ராஜா யார்?

ஒரு சக்கரவர்த்தி இருந்தான். அவன் அனேக நாடுகளைப் போரிட்டு வென்றான். உலகம் முழுவதையும் தன் ஆட்சியின்கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவனது லட்சியம். அவன் ஒரு சண்டையில் வென்ற பிறகு தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தான்.

அப்போது ஒரு வயதான துறவியைப் பார்த்தான். அவர் அழகான இயற்கைச்சூழலில் தனித்திருந்து பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார். அவர் குரலிலே அன்பு பெருகியது. கண்களில் அறிவின் ஒளி தெரிந்தது.

சக்கரவர்த்தி அவரை நெருங்கிச் சென்று கேட்டான்: ""என்னை யார் என்று தெரிகிறதா?'' துறவி சற்று நேரம் மெüனமாக இருந்தார். பிறகு, அதே கேள்வியையே சக்கரவர்த்தியிடம் திருப்பிக் கேட்டார்: ""என்னை யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா?''

சக்கரவர்த்தி, ""தெரியாது'' என்று பதில் சொன்னான். பிறகு, துறவி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்: ""நான்தான் இந்த உலகத்தின் ராஜா!''
÷சக்கரவர்த்தி பெரிதும் வியப்படைந்தான். அவன் சொன்னான்: ""என்ன சொல்கிறீர்கள். இந்த உலகத்தின் ராஜா நான்தான். நான் எவ்வளவோ நாடுகளை வென்றிருக்கிறேன்.''

துறவி சொன்னார்: ""அதிகார வெறிகொண்டு இப்படி அலைந்து திரிபவன் உலகத்தின் ராஜாவாக இருக்க முடியாது. இந்த உலகத்திலேயே நான்தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே, நான்தான் இந்த உலகத்தின் ராஜா.'' சக்கரவர்த்தி கேட்டான்: ""மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்!''

துறவி உரக்கச் சிரித்தார்: ""அதுகூட உங்களுக்குத் தெரியாதா? அய்யோ பாவம்! உங்கள் மனதை ஆராய்ந்து பாருங்கள். அங்கே அமைதி இருக்கிறதா? அப்படி இருப்பதற்கு வாய்ப்பில்லை. பேராசைக்காரர்களின் மனதில் எப்போதும் அமைதியற்ற தன்மைதான் இருக்கும். என்னைப் பாருங்கள்! எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எப்போதும் அமைதி, சமாதானம், மகிழ்ச்சி!''

""நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?'' என்று சக்கரவர்த்தி கேட்டான். துறவி சொன்னார்: ""பேராசையை வென்றவனே இந்த உலகின் உண்மையான ராஜா. தன் மனதைக் கட்டுப்படுத்தியவனிடத்தில்தான் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அவனிடம்தான் அமைதி இருக்கும். அப்படிப்பட்டவன் சக்கரவர்த்தியை விடப் பெரியவன்.''

துறவி சொன்னதை சக்கரவர்த்தி புரிந்துகொண்டான். தன்னை வென்றவனே இந்த உலகை வென்றவன் என்று அறிந்துகொண்ட பிறகு, அவன் போரிடுவதை விட்டொழித்தான். தன் குடிமக்களுக்குப் பணி செய்வதில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தான்.


:ty: தினமணி


உதவி

பத்தூர் என்ற ஊரில் ரஞ்சித் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். இவன் பிறருக்கு உதவி செய்வதில் வல்லவன். மிகவும் இரக்க குணம் கொண்டவன். ஒருநாள் அவனுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வந்தது. "புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தால் வளமாகவும், பெருமையாகவும் வாழலாம்!' என்று நினைத்தான் அவன்.
நேர்முகத் தேர்விற்குச் செல்வதற்காக நல்ல உடைகளை அணிந்து கொண்டான். நேரத்தோடு செல்ல வேண்டும் என்பதற்காக வேகமாக நடந்தான் ரஞ்சித். வழியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பெண்மணி ஒருத்தி அதன் சக்கரத்தைக் கழற்ற முயற்சி செய்து கொண்டிருந்தாள். அந்த வழியாக சென்ற யாரும் அவளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
இதைப் பார்த்த அவன், "யாராவது உதவி செய்தால்தான் அவளால் சக்கரத்தைக் கழற்றி மாட்ட முடியும். நான் உதவி செய்தால் நேரத்தோடு நேர்முகத் தேர்விற்குச் செல்ல முடியாது, அத்துடன் நான் அணிந்திருக்கும் உடைகள் வேறு அழுக்காகி விடும். என்ன செய்வது?' என்று குழம்பினான்.
கண் எதிரே ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்தும் உதவி செய்யாமல் செல்வதா? என்ன நடந்தாலும் நடக்கட்டும். அவளுக்கு உதவி செய்வோம் என்ற முடிவுக்கு வந்தான் அவன்.
காரின் அருகே சென்ற அவன், ""அம்மா! நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்!'' என்றான். பிறகு இருவரும் பழுதான சக்கரத்தைக் கழட்டி வேறு சக்கரத்தை மாட்டினர். ""மிகவும் நன்றி!'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னாள் அவள். அங்கிருந்து காரில் புறப்பட்டாள். காலதாமதமாகி விட்டது. வேலை கிடைக்கும் வாய்ப்பே இல்லை என்று நினைத்தபடி அந்த நிறுவனத்திற்குள் நுழைந்தான் அவன்.
இயக்குநர் அறையில் இருந்த பெண்மணி அவனைப் பார்த்ததும் வெளியே வந்தாள். தான் உதவி செய்த பெண்மணிதான் அவள் என்பது அவனுக்குப் புரிந்தது. அவனை வரவேற்ற அவள், ""நான் இந்த நிறுவனத்தின் இயக்குநர். பிறருக்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு இங்கே வேலை தருவதைப் பெருமையாகக் கருதுகிறேன். நாளையே நீங்கள் வேலையில் சேர்ந்து கொள்ளலாம்!'' என்றாள்.
ஒருநிமிடம் அசந்து போனான் ரஞ்சித். ஆபத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு உதவி செய்ததால், அந்த ஆண்டவன் இவ்வளவு பெரிய நண்மையை தனக்கு தந்ததை எண்ணி மகிழ்ந்தான்.
***


:ty: தினமலர்


பேராசையின் விளைவு

சோலையூர் செழிப்பு நிறைந்த ஊர். மக்கள் எந்த குறையுமின்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் சில ஆண்டுகளாக மழை பொழியாததால் எங்கும் பஞ்சமாகி மக்கள் உணவுக்கும் தண்ணீருக்கு தவியாய் தவித்தனர்.பசி,பட்டினி ,கொலை,களவு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்ட அந்த ஊர் பண்ணையார் தான் பதுக்கி வைத்திருந்த உணவு தானியங்களையும் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தண்ணீரையும் அநியாய விலைக்கு விற்று அந்த ஊரிலேயே மிகப்பெரிய செல்வந்தனாக உருவெடுத்தான்.
அந்த சமயத்தில் அந்த ஊருக்கு எங்கிருந்தோ ஒரு துறவி வந்து சேர்ந்தார். அவர் வந்ததால் அந்த ஊரில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி பஞ்சமும் நீங்கியது. மக்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்து துறவியை வணங்கி அவர் தங்குவதற்கு ஒரு குடிலையும் வற்புறுத்தி அமைத்துக் கொடுத்தனர். ஓய்வு நேரங்களில் அவரது சொற்பொழிவுகளைக் கேட்டு தெளிவு பெற்று வந்தனர். சிலர் அவரிடம் சீடர்களாக சேர்ந்தனர்.
நாளுக்கு நாள் பண்ணையாரின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. இதனால் அவர் துறவியை எப்படியாவது பழிவாங்க எண்ணினார்.
அப்போது ஒரு பணியாள் மூலம் துறவியிடம் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மந்திரம் இருப்பதை தெரிந்து கொண்டு அவரிடம் சீடராக சேர்ந்தார். அவருடனேயே தங்கிக் கொண்டார். மிகவும் பணிவுள்ள சீடனைப்போல் நடித்துக் கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் காத்திருந்த பண்ணையார் இன்று எப்படியாவது மந்திரத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்.
அன்று சொற்பொழிவாற்றி களைத்துப் போயிருந்த குருவிடம் மெல்ல கை கால்களை பிடித்து விட்டபடி "குருவே நான் உங்களிடம் ஒரு விலையுயர்ந்த பொருள் உள்ளது. நீங்கள் எனக்கு அதைத் தருவீர்களா?" என்று கேட்டார்.
ஆச்சர்யப்பட்ட குரு "என்னிடமா விலையுயர்ந்த பொருள் உள்ளது? அப்படியிருந்தால் அது எனக்குத் தேவையில்லை , தாராளமாகத் தருகிறேன், கேள்" என்றார்.
பண்ணையார் தயங்கியபடி "எனக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் மந்திரத்தை சொல்லித்தாருங்கள்" என்றார்.
இதைக் கேட்ட குரு பலமாகச் சிரித்தார் "இதுதான் உனக்கு விலைஉயர்ந்த பொருளா? சரி, உனக்கு அதை உபதேசிக்கிறேன்" என்று கூறி மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார்.
இதை சோதித்துப் பார்த்துவிட நினைத்த பண்ணையார் ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து மந்திரத்தை சொன்னார் , உடனே மண் பொன்னானது. பரவசமடைந்த பண்ணையார் தன் வீட்டுக்குப் புறப்பட்டார்.
பண்ணையார் பொன்னால் ஒவ்வொரு ஊராக விலைக்கு வாங்கினார். இறுதியில் அந்த நாட்டுக்கே ராஜாவானார். அவரது கொடுமைகளுக்கு எல்லையே இல்லை. மக்களை கொத்தடிமை போல் நடத்தினார்.
பண்ணையாருக்கு மந்திரத்தை சொல்லிக்கொடுத்தது துறவிதான் என்றறிந்த அவரது சீடர்கள் பொறாமை அடைந்தனர். துறவியைப் பற்றி அவதூறான தகவல்களை ஊருக்குள் பரப்பினர். மக்களும் அதை நம்பி துறவியை வெறுக்கத் தொடங்கினர்.
அப்போதும் துறவி புன்முறுவல் பூத்தார்.
ஒரு நாள் தட தடவென குதிரைகள் வந்து சூழ்ந்து நிற்க நான்கு போர்வீரர்கள் அதிலிருந்து இறங்கி துறவியை பிடித்து இழுத்துக்கொண்டு போய் மன்னர் முன் நிறுத்தினர்.
மன்னன் அவரை ஏளனத்துடன் ஏறிட்டு "ஏ துறவியே உன்னை எதற்காக அழைத்தேன் தெரியுமா? உன் தலையை துண்டிக்கத தான். உன்னை எதற்காகக் கொல்கிறேன் தெரியுமா? நீ இந்த மந்திரத்தை வேறு எவருக்காவது சொல்லிக் கொடுத்து அப்புறம் எனக்கு ஒரு போட்டி உருவாவதை தடுக்கத்தான்" என்று கூறியவாறே துறவியை கொல்ல வாளை வேகமாக ஓங்கினான்.
அப்போது யாரும் எதிர்பாராவண்ணம் "ஆ ,ஐயோ கையை தூக்க முடியவில்லையே" என்று அலறியபடி கீழே விழுந்தான்.
துறவி "எல்லாம் அவன் செயல்" என்று புன்னகை செய்தவாறே அந்த இடத்தை விட்டு அகன்றார்.
அனைவரும் ஓடிவந்தனர். மருத்துவரும் வரவழைக்கப்பட்டார். ஆனால் ஒருவராலும் குணமாக்க முடியவில்லை. கூடிய விரைவில் அவனது மற்றொரு கையும் இரண்டு கால்களும் விளங்காமல் போயின.
படுத்த படுக்கையானார். மன்னர் இப்படி ஆனதால் மக்கள் அவரவர் விருப்பப்படி சொத்துக்களை சூறையாடினர். அவரை இடுகாட்டின் ஓரத்தில் வீசி எறிந்துவிட்டுச் சென்றனர். அப்போது அங்கே வெட்டியான் ஒருவன் வாளியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு போனான். பண்ணையார் மெல்ல "தண்ணீர், தண்ணீர்" என்று முனகுவதை கேட்ட அவன் "அடப்பாவி , என்ன ஆட்டம் ஆடுன, இப்போ உன் நிலமைய பாத்தியா,இந்தத் தண்ணிக்காக மக்களை என்ன பாடுபடுத்தினே " என்று சொல்லியபடி வாளியிலிருந்த தண்ணீரை அவன் வாயில் ஊற்றினான். பண்ணையாரின் உயிரும் பிரிந்தது. "ஹீம் , உனக்கு என்னைத்தவிர வேறு நாதியில்லை" என்று சலித்துக் கொண்ட வெட்டியான் அவரைப் புதைத்து அங்கே ஒரு மலர் செடியையும் நட்டான்.
பேராசைப் பண்ணையாரின் கதை இவ்வாறு முடிந்தது.

அன்புடன்
சௌந்தர்





மதிகெட்ட மன்னனின் முடிவு!

பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் காசிக்கு அருகே இருந்த ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரனின் மகனாகப் பிறந்தார். அவர் நன்கு படித்துப் பெரியவரானதும் அவரது பெற்றோர் காசி நகரத்தில் உள்ள ஒருவரது மகளான சுஜாதாவைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். சுஜாதா மிக மிக அழகானவள். நல்ல புத்திசாலியும் கூட. நற்குணங்கள் படைத்தவள். அவள் தன் கணவன் வீட்டிற்கு வந்து இல்வாழ்க்கை நடத்தி யாவருக்கும் பணிபுரிந்து வந்தாள்.
ஒரு நாள் சுஜாதா தன் கணவரிடம் “நானும் இங்கு வந்து வெகு காலம் ஆகிவிட்டது. ஒருமுறை காசிக்குப் போய் என் தாய் தந்தையரைப் பார்த்து விட்டு வர எண்ணுகிறேன். நீங்களும் என்னோடு வந்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறினாள்.
போதிசத்வரும் “ஆகா, அப்படியே செய்யலாம். உன் தாய் தந்தையரை நானும் ஒரு முறை பார்த்தது போலவும் இருக்கும்” எனக் கூறி, தன் மனைவியோடு மறுநாள் வண்டி கட்டிக் கொண்டு காசிக்குக் கிளம்பினார்.
போதிசத்வர் முன் அமர்ந்து வண்டியை ஓட்ட சுஜாதா வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டு காட்சிகளை ரசித்தவாறே இருந்தாள். வண்டியும் காசி நகர எல்லையை வந்தடைந்தது. அங்கே ஒரு குளத்தருகே போதிசத்வர் வண்டியை நிறுத்தினார்.
சுஜாதாவும் கீழே இறங்கி, தான் கட்டி எடுத்து வந்த கட்டு சாத மூட்டையை எடுத்துக் கொண்டு போதிசத்வருடன் குளக்கரைக்குப் போய் அமர்ந்தாள். இருவரும் உணவை உண்டு, சற்று இளைப்பாறி விட்டு பிறகு வண்டியில் அமர்ந்து காசி நகருக்குள் செல்லலாயினர்.
அப்போது காசி மன்னன் யானை மீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தான். மக்கள் கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். சுஜாதாவும் தானும் சற்று வேடிக்கை பார்த்து விட்டு வருவதாக தன் கணவரிடம் கூறி அவரது அனுமதி பெற்று கீழே இறங்கி ஒரு ஓரமாக நின்றாள். வண்டியிலுள்ள போதே காசி மன்னன் சுஜாதாவைப் பார்த்து அவளது அழகில் மயங்கி விட்டான். அவளை அடைந்து விடுவது என எண்ணிய போது, அவள் விவாகமானவள் என்றும் அவளது கணவன் வண்டியிலுள்ள போதிசத்வர் என்பதும் அவனுக்குத் தெரிந்து விட்டது.
போதிசத்வரை எப்படியாவது ஒழித்து விட்டால் அந்த அழகிய பெண் தன்னோடு இருந்து விடுவாள் என அவன் எண்ணி அதற்கு என்ன வழி என்று யோசிக்கலானான். சட்டென ஒரு வழி அவனுக்குப் புலப்பட்டது. அவன் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு வேலையாளை அழைத்து, தன் தலையிலிருந்து கிரீடத்தை எடுத்து அவனிடம் கொடுத்து “நீ இதை அதோ தெரியும் வண்டியில் யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு வா” எனக் கூறி போதிசத்வரின் வண்டியைக் காட்டி அனுப்பினான்.
அந்த வேலையாளும் போதிசத்வர் பாராது இருந்த சமயத்தில் அரசனது கிரீடத்தை அவரது வண்டிக்குள் வைத்து விட்டான். இதற்குள் சுஜாதா அரசன் தன்னையே உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்டு வெட்கப்பட்டு தலையைத் திருப்பிக் கொண்டாள். சற்று நேரத்திற்கெல்லாம் அரசாங்க வீரன் ஒருவன் “யாரும் இருந்த இடத்தை விட்டு நகராதீர்கள் நம் அரசரின் கிரீடம் திருடுபோய் விட்டது. எல்லாரையும் சோதனை போடப் போகிறோம்” என அறிவித்தான்.
வீரர்கள் பலர் சோதனையைப் போட்டனர். ஒரு வீரன் போதிசத்வரின் வண்டியைச் சோதனை போட்டு அதில் முன்பே ஒளித்து வைக்கப்பட்டிருந்த கிரீடத்தை எடுத்து, “இதோ திருடன். கிரீடம் அகப்பட்டு விட்டது” எனக் கத்தினான். அரசனும் போதிசத்வர்தான் திருடன் எனக் கூறி அவரது தலையை வெட்டி எறியுமாறு தண்டனை அளித்தான்.
வீரர்கள் போதிசத்வரைப் பிடித்து சவுக்கால் அடித்து பல தெருக்கள் வழியாக கொலைக்களத்திற்கு அழைத்துக் கொண்டு போகலாயினர். இதைக் கண்ட சுஜாதா அவர் பின்னாலேயே ஓடிக் கண்ணீர் வடித்தவாறே “ஐயோ! நீங்கள் இப்படி அவமானப்பட நான்தான் காரணம். இது எனக்குத் தெரிந்து விட்டது. இந்த அநீதி அடுக்குமா? கடவுளே! என் முறையீட்டைக் கேளாயோ” எனக் கதறினாள். சுஜாதாவின் இந்தப் புலம்பல் தேவலோகத்தையே ஆட்டி உலுக்கியது.
தேவேந்திரனும் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு, தன் சக்தியால் போதிசத்வரை அரசன் இருந்த இடத்தில் அவனது ஆடையிலும், காசி மன்னனை போதிசத்வர் இருந்த இடத்தில் அவரது ஆடைகளையும் அணிந்து இருக்கும்படியும் மாற்றம் செய்து விட்டார். வீரர்களுக்குத் தாம் பிடித்துச் செல்வது தம் மன்னனைத் தான் என்பது தெரியவில்லை. கொலைக்களத்தில் அரசனின் தலை துண்டிக்கப்பட்ட போதுதான் உண்மை அனைவருக்கும் தெரிந்தது. மன்னனின் ஆடைகள் திரும்ப அவனது உடலுக்கு வந்தன.
போதிசத்வரின் ஆடைகள் அவரிடமே போய் விட்டன. தம் கொடுங்கோல் மன்னன் ஒழிந்தான் என்பதைக் கண்டு காசி மக்கள் மகிழ்ந்து போய் ஆரவாரம் செய்தனர். இதற்குக் காரணமான போதிசத்வரைக் காண எல்லாரும் கூடி விட்டனர்.அப்போது தேவேந்திரன் அவர்கள் முன் தோன்றி, நடந்ததை எல்லாம் கூறி காசி மன்னன் தன் கெட்ட எண்ணத்தாலேயே அழிந்தான் என்றும், இனி காசியை போதிசத்வரே ஆண்டு வருவார் என்றும் கூறினார். அத்துடன் சுஜாதா அவரது பட்டத்து ராணியாக இருப்பாள் எனவும் கூறி எல்லாரையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.

மக்களும் போதிசத்வரைத் தம் மன்னராக ஏற்று, அவரது ஆட்சியில் சுக வாழ்வு வாழ்ந்தனர். போதிசத்வரும் சுஜாதாவுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து நெடுங்காலம் ஆட்சி புரிந்து மக்களை சுகமாக இருக்கச் செய்தார்.


ஏழு நண்பர்கள்!

முன்னொரு காலத்தில் யுசிக்கி எனும் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் வாரத்தின் ஏழு நாட்களில், ஞாயிற்றுக் கிழமையை மட்டும் மிகவும் நேசித்தான். அந்த நாளில்தான் ஆசை ஆசையாக, நேரம்போவதைப் பற்றிக் கவலைப்படாமல் நாள் முழுதும் விளையாடிக்கொண்டே இருக்கலாம். அற்புதமான நாள் அது. எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். அதனால் அவன் ஞாயிறு நாட்டிற்குப் போய்விட வேண்டும் என்று தீர்மானித்து பயணத்தைத் தொடங்கினான்.
பயணத்திடையில் யுசிக்கி ஒரு பெரிய எறும்புப் புற்றைப் பார்த்தான்.
“”எறும்புகளே, உங்களில் யாருக்காவது ஞாயிறு நாடு எங்கே இருக்கிறது என்று தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்” என்று யுசிக்கி, எறும்புகளிடம் கேட்டான்.
“”ஞாயிறு நாட்டிற்குச் செல்லும் பாதையை நாங்கள் யாரும் பார்த்ததில்லையே! நீ மைனாக் குருவியிடம் வேண்டுமானால் கேட்டுப்பாரேன். ஒருக்கால் அதற்குத் தெரிந்திருக்கலாம்” என்றன எறும்புகள்.
ஒரு மரத்தில் மைனாக் குருவி கூடு கட்டியிருப்பதை யுசிக்கி பார்த்தான். அந்தக் குருவி, தன் குஞ்சுகளைத் தூங்க வைப்பதற்காகப் பாட்டுப்பாடிக் கொண்டிருந்தது. யுசிக்கி மைனாவிடம் கேட்டான்:
“”அருமையான மைனாவே, ஞாயிறு நாடு எங்கேயிருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? தெரிந்தால் எனக்குச் சொல்லேன்!”
“”எனக்குத் தெரியாதே தம்பி!” மைனா பதில் சொன்னது. “”நான் ஒரு முறைகூட ஞாயிறு நாட்டைப் பார்த்ததில்லையே! ஒருக்கால், ஆந்தைக்குத் தெரிந்திருக்கலாம். அது ஒரு பெரிய ஆலமரத்தில் குடியிருக்கிறது. அது மிகவும் அறிவாளி. இரவில்கூட அதற்குக் கண்கள் தெரியும். எனவே, அதற்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீ ஆந்தையிடம் சென்று கேட்டுப் பார்.”
யுசிக்கி ஆலமரத்திற்குச் சென்று, “”அறிவாளி ஆந்தையே, ஞாயிறு நாடு எங்கே இருக்கிறது என்று எனக்குச் சொல்வாயா?” என்று கேட்டான்.
ஆந்தை நாள் முழுதும் தூங்கிக்கொண்டிருந்துவிட்டு சற்று முன்புதான் கண் விழித்திருந்தது. ஆந்தை சொன்னது,”"ஞாயிறு நாடு இங்கிருந்து மிகவும் தொலைவில் உள்ளது. ஆனால், நீ அஞ்சாமல் சென்றுகொண்டே இருக்கவேண்டும். அப்போது உன் எதிரே “திங்கள் நாடு’ வரும். திங்கள் மிகவும் கடினமான உழைப்பாளி. ஆனாலும், அது இனிமையாகப் பழகக்கூடியதுதான். அடுத்தபடியாக அது உனக்கு வழிகாட்டும்.”
யுசிக்கி, திங்கள் நாடு வரும் வரையில் நடந்துகொண்டே இருந்தான். அந்த நாட்டைச் சென்றடைந்த பிறகு அவன் திங்களிடம் சொன்னான்: “”வணக்கம் திங்களே! ஞாயிறு நாட்டிற்குச் செல்வதற்கு எனக்கு நீ வழி காட்ட முடியுமா? நான் எந்த வழியாகச் செல்ல வேண்டும்!”
திங்கள் சொன்னது: “”வணக்கம் யுசிக்கி! இங்கிருந்து ஆறு நாட்கள் பயணம் செய்தால் ஞாயிறு நாடு வந்துவிடும். இந்த வைக்கோல் கூளங்களை வாரியள்ளி வந்து போராகக் குவிப்பதற்கு நீ எனக்கு உதவி செய். நீ உதவி செய்தால் ஞாயிறு நாடு செல்வதற்கு நான் வழி காட்டுகிறேன்.”
யுசிக்கி உதவுவதாக ஒத்துக்கொண்டான். அவர்கள் இருவரும் நாள் முழுதும் கடினமாக வேலை செய்தார்கள். மாலைப் பொழுது வந்தது. அவர்கள் வைக்கோல்களை அள்ளித் திரட்டிக் குவித்த கைக்கோல் போர்கள் அங்கே நிறைய இருந்தன. திங்கள், யுசிக்கி தனக்கு உதவி செய்ததற்காக மகிழ்ந்து அவனைப் பாராட்டியது. அது, செவ்வாய் நாட்டை அடையும் வழியை அவனுக்குச் சொன்னது.
அவன் நடந்து சென்று செவ்வாய் நாடு இருக்கும் இடத்தை அடைந்தான். அவன் செவ்வாயிடம் கேட்டான்: “”வணக்கம் செவ்வாய்! ஞாயிறு நாட்டிற்கு எப்படிச் செல்வதென்று நீ எனக்குக் கொஞ்சம் சொல்கிறாயா?”
செவ்வாய் சொன்னது: “”வணக்கம் யுசிக்கி! இங்கிருந்து ஐந்து நாள் பயணம் செய்தால் அந்த நாட்டிற்குச் சென்றுவிடலாம். நான் உனக்கு அந்த வழியைச் சொல்கிறேன். ஆனால், நீ எனக்கு முதலில் ஒரு உதவி செய்ய வேண்டும். நாங்கள் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் கட்டுகிறோம். நீயும் வந்து உதவி செய்ய வேண்டும்.”
யுசிக்கி அதை ஏற்றுக்கொண்டான்.
அவர்கள் நாள் முழுதும் கடுமையாக வேலை செய்தார்கள். இறுதியாக அங்கே ஒரு கட்டடம் கட்டப்பட்டுவிட்டது. பிறகு செவ்வாய், யுசிக்கியிடம் புதன் நாட்டிற்குப் போகும் வழியைச் சொன்னது.
யுசிக்கி, புதன் நாட்டை அடைந்து புதனிடம் சொன்னான்: “”வணக்கம் புதனே! நான் ஞாயிறு நாட்டிற்குச் செல்ல வேண்டும். அதற்கு நீ எனக்கு உதவி செய்வாயா?”
புதன் அவனுக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ஏனென்றால், அது ஒரு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. ஒரு கன்றுக்குட்டி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பிடிப்பதற்காக புதனும் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு புதன் சொன்னது: “”இந்தக் கன்றுக் குட்டியைப் பிடிப்பதற்கு எனக்குக் கொஞ்சம் உதவிசெய்! பிறகு நாம் பேசலாம்.”
அங்குமிங்கும் துள்ளித் துள்ளி ஓடிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியை அவர்கள் இருவரும் சேர்ந்து துரத்திப் பிடித்தார்கள். பிறகு புதன், யுசிக்கியின் சுறுசுறுப்பை வியந்து பாராட்டிவிட்டுச் சொன்னது: “”இங்கிருந்து பயணம் செய்தால் நான்கு நாட்களில் ஞாயிறு நாட்டை அடைந்து விடலாம். வியாழனிடம் போய்க் கேள். என்னைவிட அது உனக்கு நல்ல முறையில் வழி சொல்லும்.”
வியாழன் நாடு மிகவும் பக்கத்தில்தான் இருந்தது. அங்கே வியாழன், யுசிக்கியை வரவேற்கக் காத்திருந்ததுபோல தன் வீட்டு வாயிற்படியிலேயே நின்றிருந்தது. அது, யுசிக்கியைக் கண்டதும் கூறியது: “”வணக்கம் யுசிக்கி! நீ மிகவும் நல்ல பையன் என்றும், எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவன் என்றும் கேள்விப்பட்டேன். நீ எனக்கும் உதவி செய்வாயா? எனது தோட்டத்தில் களை பிடுங்க வேண்டிய வேலை இருக்கிறது.பிறகு, பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டிய வேலையும் இருக்கிறது.”
அந்த வேலையைச் செய்ய முதலில் யுசிக்கி விரும்பவில்லை. ஆனால், பூக்களெல்லாம் தலையசைத்து அவனுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவித்துவிட்டதால், அந்த வேலையைச் செய்து முடித்துவிடத் தீர்மானித்தான். அவன் மிகத் திறமையாக வேலை செய்ததைப் பார்த்துவிட்டு வியாழன் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. அது யுசிக்கியிடம், ஞாயிறு நாடு இங்கிருந்து மூன்று நாள் பயணத் தொலைவில் இருப்பதாகச் சொல்லி, அங்கு செல்லும் வழியையும் காட்டியது.
உடனடியாக யுசிக்கி வெள்ளி நாட்டை அடைந்தான். அந்த நாளில் வெள்ளி, வீட்டிலிருந்த துணியையெல்லாம் அள்ளி வந்து சலவை எந்திரத்தில் போட்டு துவைத்துக்கொண்டிருந்தது. அன்று சலவை செய்யும் நாள். யுசிக்குக்கு சலவை எந்திரத்தில் வேலை செய்வது என்றால் மிகவும் ஆசை. வெள்ளி உதவி கேட்பதற்கு முன்பே அவன் தானாகவே வேலையில் இறங்கிவிட்டான். அவன் செய்த உதவியால் மகிழ்ச்சியடைந்த வெள்ளி அவனிடம் சொன்னது,”"இங்கிருந்து நீ ஞாயிறு நாட்டை அடைவதற்கு இரண்டு நாட்களாகும். முதலில் சனி நாட்டிற்குப் போ. பிறகு, அங்கிருந்து ஞாயிறு நாட்டிற்குச் சென்றுவிடலாம்.”
யுசிக்கி, சனி நாட்டை அடைந்தபோது அங்கும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருப்பதைத் தெரிந்துகொண்டான். அவன் சனியிடம் கேட்டான்: “”வணக்கம் சனியே! ஞாயிறு நாட்டிற்குப் போகும் பாதை எதுவென்று சொல்வாயா?”
சனி சொன்னது: “”இங்கிருந்து ஒரு நாள் பயணம்தான். நீ முதலில் என் வீட்டைக் கழுவி சுத்தம் செய். பிறகு, சமையலறையில் கொஞ்சம் விறகுகளைக் கொண்டுபோய் வை. இந்த உதவிகளைச் செய்தால், நானும் உன்னுடன் வருகிறேன். நாம் இருவருமாகச் சேர்ந்தே ஞாயிறு நாட்டிற்குச் செல்லலாம்.”
யுசிக்கி, அப்படியும் இப்படியும் சுறுசுறுப்பாக ஓடி வேலை செய்தான். அவன் கடுமையாக உழைத்து, ஒரு வழியாக வேலைகளை முடித்தான். பிறகு, அலுப்புத்தீர ஒரு குளியல் போட்டான். ஞாயிறு நாட்டுக்குப் போகும்போது சுத்தமாக இருந்தால்தானே நல்லது.
ஞாயிறு நாட்டில் எல்லாமே அழகாக இருந்தன. எல்லோரையும்விட ஞாயிறு மிக அழகாக இருந்தது. உடனே, அங்கு ஞாயிறின் விருந்தாளிகள் வரத் தொடங்கினார்கள். வாரத்தின் மற்ற நாட்கள்தான் அவர்கள். யுசிக்குக்கு அவர்களை முன்பே தெரியும். ஞாயிறு அவனிடம் சொன்னது: “”வாரத்தின் மற்ற நாட்களில் யாரெல்லாம் கடுமையாக வேலை செய்கிறார்களோ, அவர்கள் மட்டும்தான் ஞாயிறு நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீ மட்டும் உதவி செய்யாமல் இருந்திருந்தால் வாரத்தின் மற்ற நாட்கள் அவரவர் வேலையை நல்ல விதமாக செய்து முடித்திருக்க மாட்டார்கள். அதற்காக நான் உன்னைப் பாராட்டுகிறேன்.”
அது சொன்னதைக் கேட்டு யுசிக்கி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பிறகு, அவர்கள் அனைவரும் சேர்ந்து நடனமாடத் தொடங்கினார்கள். அவன், தான் ஞாயிறு நாட்டிலேயே எப்போதும் தங்கியிருக்க வேண்டும் என்று கேட்கக்கூட மறந்துவிட்டான். இப்போதுதான் அவனுக்கு எல்லா நாட்களும் நண்பர்களாகிவிட்டார்களே!
- தினமணி

கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்!
அது ஒரு சிற்றூர். அதை ஒட்டி ஒரு காடு. அந்த சிற்றூரில் முத்து என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும்போது, அழகான மான்குட்டியைக் கண்டு, அதை தூக்கிக் கொண்டுவந்து வளர்த்தான். அதற்கு வேண்டியதெல்லாம் செய்துகொடுத்து பராமரித்தான்.
ஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு தேடியும் கிடைக்காததால், கடும் கோபம் கொண்டான். “மானைக் கடத்தியவன் யாராக இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன்” என சபதம் போட்டான். கடத்தியவனைக் கண்ணில் காட்டும் படி கடவுளிடம் உருகி வேண்டினான்.
அடுத்த நிமிடமே கடவுள் அவனுக்கு காட்சியளித்தார். “பக்தா.. உன் மான் காணாமல் போனதற்கு வருந்துகிறேன். உனக்கு என்ன வேண்டும்?” என்றார்.
“எனது மான் காணாமல் போக யார் காரணமோ, அவர்களை என் கண் முன்னால் காட்டுங்கள். அவனுக்கு என் கையால் தண்டனை அளிக்க வேண்டும்” என ஆவேசமாகக் கூறினான்.
“பாசத்தை விட கோபம் அதிகமாக இருக்கக் கூடாது பக்தா. உன் மானைக் கேள், அல்லது பொன் பொருள் என எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன். உன் கோபத்தால் சிக்கலில் மாட்டுவாய்” என்றார்.
ஆனால் அவன் கேட்பதாக இல்லை. “என்ன ஆனாலும் சரி, அவனை என் கண்முன்னே நிறுத்துங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது உங்கள் கடமையல்லவா..” என கத்தினான்.
சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின், “சரி, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீ தான் பொறுப்பு” எனக் கூறினார்.
உற்சாகமான அவன் “இது போதும்.. அவனைக் கொண்டுவாருங்கள்” என்றான்.
உடனே கடவுள் கையை நீட்ட, அங்கு நின்றிருந்தது மிகப் பெரிய சிங்கம்!
அதைப் பார்த்த்து உறைந்து போன முத்து, கடவுளே காப்பாற்று என அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான். ஆனால் சிங்கத்திடமிருந்து தப்பிக்க முடியுமா என்ன!
இன்றைய மனிதர்கள் பலரும் இப்படித்தான். ஆத்திரத்தால் அறிவிழக்கிறார்கள். பழிவாங்கும் எண்ணம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆத்திரம் வரும் நேரத்தில் ஒரு நிமிடம் அறிவுக்கு வேலை கொடுத்தால் போதும். எந்தப் பிரச்சனையும் நெருங்காது.

உழைத்துக் கொடு

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மன்னன் கொடை வள்ளல் என்ற பெயர் பெற்றிருந்தான். அவனிடம் யார் போய் எதைக் கேட்டாலும் அவன் அதைக் கொடுத்து வரவே அவன் புகழ் எங்கும் பரவி இருந்தது. பண்டிதர்கள் பாமரர்கள் என்று பாரபட்சம் காட்டாமல் பணம், பண்டம், நவரத்தினம், தானியம், என்று அவன் கொடுத்து வந்தது அவனை யாவர் பார்வையிலும் மிகவும் உயர்த்தி விட்டது.
ஒருமுறை மன்னன் தன் பிறந்தநாளின் போது மக்களுக்குப் பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பரிசு பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசுகளை வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டம் குறைந்து கொண்டே போயிற்று. கடைசியில் ஒரே ஒரு அந்தணர் மட்டும் பொறுமையாக வெகு நேரமாக நின்று கொண்டிருப்பதை மன்னன் கவனித்தான். அவன் அவரிடம் “பண்டிதரே! ஏன் அசையாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேளுங்கள். அதைக் கொடுக்கிறேன்” என்றான்.
அந்த அந்தணரும் “அரசே! எனக்குப் பொன்னும் வேண்டாம். மணியோ முத்தோ மானியமோ எதுவும் வேண்டாம். ஆனால் நீங்களாக நேற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதித்து வாங்கிய பொருள் ஏதாவது உங்களிடம் இருந்தால் அதைக் கொடுங்கள். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன்” என்றார்.
அதைக் கேட்ட மன்னன் திகைத்துப் போனான். அந்தணர் கூறியது அவன் மனதில் சுருக்கென்று தைத்தது. ஆம். அவன் தன் பொருள் என்று எதை எல்லாம் எண்ணினானோ அவை தான் உழைத்துச் சம்பாதித்தவை அல்ல என்பதை அறிந்து கொண்டான். ஆம் அவை யாவும் மக்கள் கொடுத்தவரிப் பணத்தில் வாங்கப் பட்ட பொருள்களே! இதை உணர்ந்த அவன் அந்த அந்தணரிடம் “பண்டிதரே! நானாக உழைத்துச் சம்பாதித்தது என்று எதுவும் இப்போது என்னிடம் இல்லை. என்னிடம் இப்போது உள்ளவற்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள். கொடுக்கிறேன்” என்று சற்று நாணிக் குறுகிக் கூறினான்.
அந்தணரோ “அரசே! இப்போது உங்களிடம் உள்ள எதையும் நான் கேட்க மாட்டேன். எனவே நீங்கள் உழைத்து சம்பாதித்தது எதுவானாலும் ஏற்றுக் கொள்வேன். மற்றவை எவ்வளவு விலை உயர்ந்தனவாக இருந்தாலும் அவை எனக்கு வேண்டவே வேண்டாமே” என்று உறுதி படக் கூறினார். அப்போது மன்னன் “பண்டிதரே! நீங்கள் தயவு செய்து நாளைக்கு வந்தால் நீங்கள் கேட்டபடியே பொருளைக் கொடுக்கிறேன்” என்றான். அந்தணரும் மன்னனை வணங்கி விட்டு சிரித்தவாறே சென்றார்.
மன்னனுக்கு அந்தணர் கூறியதன் பொருள் விளங்கி விட்டது. மன்னனுக்கு மக்களிடமிருந்து கிடைப்பதெல்லாம் அவர்கள் உழைத்துச் சம்பாதித்துக் கொடுத்த பணமே என்றும் அவன் அதைத் தன் பணமாகக் கருதி செலவு செய்வது சரஇல்ல என்றும் உணர்ந்தான். அதனால் அவர் கூறியபடி அந்தணருக்கு ஒன்றை கொடுக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டான்.
மன்னன் தன் பட்டாடைகளைக் களைந்து விட்டு சாதாரணக் கூலியாள் போல ஆடைகளை அணிந்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியே நடந்து சென்றான். அவன் தான் செய்யக் கூடிய வேலை ஏதாவது கிடைக்குமா என்று அலைந்து பார்த்தான். ஆனால் ஒரு வேலை கூடக்கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு மீனவர் குப்பத்திற்குப் போய் பல மீனவர்களிடம் தனக்கு வேலை கொடுக்கும்படிக் கேட்டான். அநேகமாக எல்லோருமே வேலை இல்லை என்றே சொல்லி விட்டார்கள். ஆனால் ஒருவன் மட்டும் அவனது நிலையைக் கண்டு பரிதாபப் பட்டு “நான் உனக்கு வேலை கொடுக்கிறேன். நீ வலை வீசி மீன் பிடித்துக் கொண்டு வரவேண்டும். நீ கொண்டு வருவனவற்றில் பெரிய மீன்களாக இருந்தால் ஒரு மீனிற்கு ஒரு செப்புக் காசு வீதம் கொடுப்பேன். சிறிய மீனாக இருந்தால் ஒரு மீனிற்கு ஒரு சோழி வீதம் தான் கொடுப்பேன்” என்று கூறி மீன் பிடிக்கும் வலையை அவனிடம் கொடுத்தான்.
அவனும் வலையை வாங்கிக் கொண்டு கடலுக்குப் போய் வலையை விரித்துப் போட்டான். அதில் ஒரு பெரிய மீனும் ஒரு சிறிய மீனும் சிக்கின. அவனும் கிடைத்தது போதும் என்று திருப்தி அடைந்து அந்த மீன்களைக் கொண்டு போய் மீனவனிடம் கொடுக்கவே, மீனவனும் ஒரு செப்புக்காசையும் ஒரு சோழியையும் கொடுத்தான். அவனும் அதை வாங்கிக் கொண்டு அரண்மனைக்குச் சென்றான்.
மறுநாள் மன்னன் தர்பாருக்கு வந்தபோது அங்கே அந்தணர் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவரைத் தன்னருகே அழைத்து “பண்டிதரே! நேற்றிரவு நான் வேலை செய்து ஒரு செப்புக்காசும் ஒரு சோழியும் சம்பாதித்தேன். அவற்றை உங்களுக்கு தானமாகக் கொடுக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.
அந்தணரும் மகிழ்ச்சியுடன் அவற்றை வாங்கிக் கொண்டு “இவை போன்ற பொருள்களைத் தான் விரும்புவது” எனக்கூறி மன்னனை வணங்கிவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரது மனைவி மன்னனைக் காணச் சென்ற தன் கணவன் விலையுயர்ந்த பொருள்களை சன்மானமாகப் பெற்று எடுத்துக் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தாள். அவர் வந்ததும் ஆவலுடன் அவள் “சன்மானம் கிடைத்ததா? அவை என்ன? யாராவது அவற்றைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்களா?” என்று ஆவலுடன் கேட்டாள்.
அவரும் “மன்னர் விலையே மதிக்க முடியாத பொருள்களை சன்மானமாகக் கொடுத்திருக்கிறார்” என்று சிரித்துக் கொண்டே கூறி தாம் பெற்ற ஒரு செப்புக் காசையும் ஒரு சோழியையும் அவளிடம் கொடுத்தார். அவற்றை வாங்கிப் பார்த்த அவள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்து “பூ இவ்வளவு தானா உங்களுக்குக் கிடைத்த சன்மானம்? இவற்றைப் பெற்றுக் கொள்ளத்தான் இரண்டு நாட்களாக அரண்மனைக்குப் போய் மன்னரைப் பார்த்தீர்களா?” என்று அழாத குறையாகக் கேட்டாள்.
அந்தணரோ! “இவை மன்னரே உழைத்துச் சம்பாதித்தவை. இவற்றை எனக்குக் கொடுத்தது மிகமிக விலையுயர்ந்த பொருள்களைக் கொடுத்ததற்குச் சமம். இவை வேறு யாருக்குமே கிடைக்காதே” என்றார். அதைக் கேட்ட அவரது மனைவிக்குக் கோபமே வந்து விட்டது. அவற்றைத் தூக்கித் தன் வீட்டு வாசலில் எறிந்து அவள் “ஒரு செப்புக் காசும் ஒரு சோழியும் விலையுயர்ந்த பொருள்களா? யாருக்கு வேண்டும் அவை?” என்று கூவினாள். அந்தணர் வீண் சண்டை எதற்கு என்று எதுவும் பேசவில்லை.
அன்றைய வேலைகளை இருவரும் செய்து விட்டு இரவானதும் படுத்துத் தூங்கினார்கள். மறுநாள் காலையில் அவர்கள் எழுந்து வாசலைப் பார்த்த போது அங்கு இரண்டு மரங்கள் முளைத்து உயர்ந்து நிற்பதைக் கண்டார்கள். ஒரு மரத்தில் தங்கக் காசுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன. மற்ற மரத்தில் வெள்ளிச் சோழிகளாக இருந்தன. அவற்றைக் கண்டு இருவரும் ஆச்சரியப்பட்டு தங்க நாணயங்களையும் வெள்ளிச் சோழிகளையும் பறித்து எடுத்தார்கள். அந்தணர் தம் மனைவியிடம் “பார்த்தாயா! நான் சொன்னது சரிதானே! செப்புக்காசும் சோழியும் மரங்களாக முளைத்தன தங்கக் காசுகளையும் வெள்ளிச்சோழிகளையும் கொடுத்திருக்கின்றன. அவை விலையுயர்ந்த பொருள்கள் தாமே?” என்று கேட்டாள்.
அவரது மனைவியும் “ஆம். விலையுயர்ந்தவையே. அப்போது அவற்றின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை தான் எதையும் உழைத்துச் சம்பாதித்தாலே அதற்கு மதிப்பே அதிகம் தான்” என்றாள். அந்தணர் அவற்றை விற்றுப் பணமாக்கி சுகமாக வாழ்ந்து வந்தார்.

1 கருத்து:


மன்னிக்கவும்.. இவ் வலைப்பக்கமானது திருத்த வேலை காரணமாக சோதனையோட்டத்தில் உள்ளது.

Recent Posts

ரூ. 251க்கு ஸ்மார்ட்போனா! இணையதளம் முடக்கம்: பொதுமக்கள் ஏமாற்றம்

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, 251 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனை இன்று காலை 6 மணிக்கு தொடங்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Visiters